Saturday, August 22, 2015

கீரைத்தோட்டம் அமைப்பது எப்படி..?

நண்பர்கள் பலர் என்னிடம் கீரைத்தொட்டம் அமைப்பது எப்படி?
என்பது பற்றியான வினாக்களைத்தான் அதிகம் தொடுக்கிறார்கள்...
அவர்களுக்காக இந்த பதிவினை வெளியிடுகிறேன்....

நிலம் தயாரிப்பு முறை :
முதலில் கீரைத்தோட்டம் போடுவதற்குண்டான நிலங்கள் பாசன வசதியுடன் கூடிய மேட்டுப்பாங்கான இடமாக இருக்க வேண்டும். குறைந்த பட்சம் பத்து சென்ட் நிலமாவது இருத்தல் வேண்டும்.

தேர்வு செய்திட்ட நிலத்தை நன்றாக இரண்டு முறை உழவு செய்து, நிலத்தில் உள்ள செடி, செத்தைகள், குப்பைகளை அகற்றிவிட வேண்டும். கட்டிகள் நீங்க பரம்பு அடிக்க வேண்டும். பின்பு பத்து சென்ட் நிலத்திற்கு ஒரு டன் தொழு உரம் இட வேண்டும். அதன் பிறகு ஒரு உழவு ஓட்டி ஒரு கிலோ வேப்பம் புண்ணாக்கு தூவி மீண்டும் நன்றாக பரம்பு அடிக்கவும்.



அந்த இடத்தில் ஐம்பது சதுர அடி பாத்திகளாக பிரித்து போடவும். (மொத்தமுள்ள இடத்தில் எத்தனை வகை கீரைகள் பயிரிடுகிறமோ அதற்கு தகுந்தார்போல பிரித்துக்கொள்ளலாம்). ஒரு பாத்திக்கு இருபத்தி ஐந்து கிராம் விதைகளை நன்றாக சலித்த மணலுடன் கலந்து தூவ வேண்டும். பின்பு, கைகளால் பாத்திகளின் மேல் மண்ணை லேசாக மூடி விடவும். இப்போது மெதுவான வேகத்தில் நீர் பாய்ச்ச வேண்டும்.

மூன்று நாள் சென்ற பின் மீண்டும் நிலத்திற்கு நீர் பாய்ச்ச வேண்டும்.

ஒரு வாரம் கழித்து, களை பறித்து, மீண்டும் நீர் பாய்ச்சுதல் வேண்டும்.

தண்ணீர் பாய்ச்சுதல் என்பது, அதிகமாக நீர் தேங்காத அளவுக்கும், கீரைகள் அதிக வாட்டம் அடையாத அளவுக்கும், மண்ணில் லேசான ஈரப்பதம் இருக்குமளவிற்கும் இருத்தல் வேண்டும். அவ்வப்போது தோன்றும் கலைச்செடிகளை கைகளால் மட்டும் அகற்றி விடுதல் வேண்டும்.

கீரை ரகங்கள்:
ஒரு முறை மட்டும் அறுவடை செய்யும் ரகங்கள்:

  • தண்டுக்கீரை
  • சிறுகீரை
  • முளைக்கீரை
  • வெந்தயக்கீரை

மேற்கண்ட கீரை ரகங்கள் விதைத்து இருபத்தி ஐந்தாம் நாள் முதல் அறுவடைக்கு தயாராகிவிடும். அறுவடை செய்தபின், அதில் லேசாக நிலத்தை மண்வெட்டியால் கொத்தி சமப்படுத்தி, மீண்டும் அதே போல் விதைகளை தூவி நீர் பாசனம் செய்யவும்.

ஒருமுறை விதைத்து ஆறு மாதங்கள் அறுவடை செய்யும் ரகங்கள்:

  • அரைக்கீரை
  • பொன்னாங்கண்ணி கீரை
  • பாலாக்கீரை

மேற்கண்ட கீரை ரகங்கள் முப்பதாம் நாள் அறுவடைக்கு தயாராகிவிடும். இந்த கால இடைவெளியில் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு  அறுவடை செய்யலாம். ஆறு மாதங்கள் கழித்து, நிலத்தினை செப்பனிட்டு மீண்டும் கீரை பயிர் செய்யலாம்.

கீரைப்பாத்திகளின் வரப்புகளில் தகுந்த இடைவெளியில் கொத்தமல்லி கீரையினை பயிர் செய்யலாம். இது ஒருமுறை மட்டுமே பயிரிட்டு அறுவடை செய்யும் ரகம்.

தோட்டத்தை சுற்றிலும் நான்கு புறமும் செடி முருங்கை நடவு செய்யலாம்.

தோட்டத்தை சுற்றிலும் வரப்பு ஓரங்களில் அகத்திகீரைகளை நடவு செய்யலாம்.


பயிர் பாதுகாப்பு முறை:
கீரைகளை தாக்கும் வண்டுகள், பூச்சிகளை கட்டுப்படுத்த இயற்கை வழிமுறைகளை மட்டுமே கடைபிடிக்கவும். கீரை தோட்டத்தினை சுற்றிலும் சாமந்திப்பூ செடிகளை நடவு செய்யவும். இது ஏனென்றால், பூச்சிகளையும், வண்டுகளையும் மஞ்சள் நிற பூக்கள் அதிகம் கவரும். அதனால் கீரைகளை அதிகம் தாக்காது.

அதையும் தாண்டி சில பூச்சிகள் கீரைகளை தாக்கினால், இயற்கை பூச்சி விரட்டி மூலம் விரட்டி விடலாம். பூச்சி விரட்டிகளை இயற்கை முறையில் தயாரிப்பது எப்படி என்பதையும் இப்போது பார்ப்போம்.

பச்சை மிளகாய்,  இஞ்சி,  பூண்டு - இவை மூன்றையும் சம அளவுகள் எடுத்து, நன்றாக அரைத்துகொள்ளவும். இந்த விழுதை, அதன் சம அளவிற்கு மாட்டு சிறுநீருடன் கலந்து,  ஒரு நாள் இரவு முழுவதும் வைத்திருக்க வேண்டும். அந்த கரைசலை மறுநாள் காலையில் துணி மூலம் நன்றாக வடிகட்டி எடுக்க வேண்டும். பின்பு, முன்னூறு மில்லி கரைசலுக்கு, பத்து லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து கீரை செடிகள் மீது நன்றாக படும்படி தெளித்து விடுதல் வேண்டும். பத்து நாட்கள் அல்லது பதினைந்து நாட்கள் இடைவெளியில் பூச்சிகளின் தாக்கத்தினை பொருத்து  இதனை தெளிக்க வேண்டும். இந்தக்கரைசலானது, ஒரு ஏக்கர் நிலத்திற்கு மூன்று லிட்டர் தேவை. நீங்கள் பயிரிடும் நிலத்தின் அளவிற்கு ஏற்ப தயாரித்துக்கொள்ள வேண்டும். ஒரு முறை தயாரித்த கரைசலை உடனே பயன்படுத்தி விட வேண்டும். இருப்பு வைத்து பயன்படுத்த முடியாது. கண்டிப்பாக இந்த முறையின் மூலம் பூச்சி, வண்டுகளின் தாக்கம் மட்டுப்படுத்தப்படும். (பூச்சி தாக்குதல் தெரிந்தால் மட்டுமே இந்த கரைசலை தெளிக்கவும்).

அறுவடைக்கு தயாரான கீரைகளை அறுவடை செய்தபின், உங்கள் ஊரின் சந்தை நிலவரத்திற்கேற்ப விலை நிர்ணயம் செய்து, நேரடி விற்பனை செய்வதின் மூலம் அதிக லாபம் பெறலாம்.

நீர்ப்பாசனம் செய்யும்போது தண்ணீருடன் அமிர்தக் கரைசலையும் சேர்த்து பாசனம் செய்திட்டால், கீரைகளுக்கு எந்த ஒரு உரமும் இட வேண்டிய அவசியம் இல்லை.

பத்து நாட்களுக்கு ஒருமுறை நூறு லிட்டர் தண்ணீரில் ஐந்து லிட்டர் வடிகட்டிய அமிர்த கரைசலை கலந்து தெளித்து வந்தால் பயிர்கள் நோய் எதிர்ப்பு சக்தியுடன் செழித்து வளரும்.

குறிப்பு: அமிர்தக்கரைசலோ, பூச்சி விரட்டியோ அதிகாலை வேளையில் மட்டுமே தெளித்திடல் வேண்டும்.

கீரை விதைகளை தனியார் விதை விற்பனை நிலையங்களிலும், அரசு வேளாண் துறைகளிடமும் வாங்கிக்கொள்ளலாம்.

நீங்கள் பயிரிடும் கீரை ரகங்களில் ஒரு பாத்தியை மட்டும் விதைக்காக ஒதுக்கி, வளரவிட்டு, விதை வைத்த பின், செடியை பறித்து, வெய்யிலில் நன்றாக இரண்டு நாட்கள் காய வைத்து, விதைகளை பிரித்து எடுக்கவும். இம்முறையில் விதைகளுக்காக மீண்டும் மீண்டும் செலவு செய்திட வேண்டாம். இருப்பு வைத்துள்ள விதைகளை மாதம் ஒருமுறை வெயிலில் காய வைத்து எடுத்து மீண்டும் இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும்.

ஐம்பது சென்ட், அல்லது ஒரு ஏக்கர் நிலத்தில் கீரை பயிரிட நினைப்பவர்கள் வாய்க்கால் பாசனம் இல்லாமல், மேற்சொன்ன அளவுகளில் மேட்டுப்பாத்தி அமைத்து தெளிப்பு நீர் பாசனம் மூலம் பயிர் செய்யலாம். இதன் மூலம், பாதி அளவு தண்ணீரே செலவாகும்.

நண்பர்களே, என்னுடைய அனுபவத்தில் தெரிந்த விசயங்களை உங்களுடன் பகிர்ந்த்துள்ளேன். வேறு ஏதும் சந்தேகங்கள் இருந்தால் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். முடிந்த அளவு சந்தேகங்களை தீர்த்து வைக்கிறேன்.

உங்கள் மேலான கருத்துக்களையும் வரவேற்கிறேன்.

Share this

Artikel Terkait

0 Comment to "கீரைத்தோட்டம் அமைப்பது எப்படி..?"

Post a Comment