Saturday, September 26, 2015

உணவுபொருட்களை நாமே தயார் செய்து கொள்வது எப்படி? இன்று நல்லெண்ணெய்...

'வைத்தியனுக்கு கொடுக்கிறத வாணியனுக்கு கொடு' இப்படி ஒரு பழமொழி கேள்விப்பட்டிருப்பீர்கள். சுத்தமான பொருட்களை வாங்கி உபயோகப்படுத்தினால் நோய் நொடி இல்லாமல் வைத்தியனிடம் போகாமல் நம்மள நாமே பாதுகாத்துக்கலாம் இல்லையா? நாம வாங்கக்கூடிய பொருள் எல்லாமே சுத்தமானதுதானா அப்படின்னு பாத்தா ரொம்ப யோசிக்கவே செய்யணும். நம்ம உச்சந்தலையிலேருந்து உள்ளங்கால் வரைக்கும், உடம்புக்கு வெளியே இருந்தாலும் சரி, உள்ள இருந்தாலும் சரி நாம உபயோகிக்கிற பொருள் நூறு சதவீதம் ஆரோக்கியமானதுதானா? சுத்தமானதுதானா? உடலுக்கு ஏற்றதுதானா? அப்படின்னு யோசிச்சி யாருமே பொருட்களை வாங்குறதும் இல்லை, உபயோகிக்கிறதும் இல்லை. இதுதான் உண்மை. அது பெரிய 'பிராண்டட்' கம்பெனி பொருளா இருந்தாலும் சரி. தொலைகாட்சி பெட்டியில விளம்பரம் செய்ற கம்பனிகளா இருந்தாலும் சரி. கண்டிப்பா அதுல ஆரோக்கிய கேடான விசயங்கள் இருக்கத்தான் செய்யும்.

அப்போ என்ன செய்ய? எப்படின்னுனாலும் பொருள்கள் வாங்கித்தான ஆக வேண்டி இருக்கு. அப்படிங்கறீங்களா? சரிதான். கடைகள்ள வாங்க கூடிய அந்த பொருட்கள வீட்டுல நம்ம கண்ணு முன்னால நாமளே செய்து உபயோகப்படுத்தினா.. "அப்படி நாம செய்ய முடியுமா..? அதுக்கு பெரிய பெரிய இயந்திரம்லாம் வேணுமே..."அப்படிங்கற முனுமுனுப்பெல்லாம் வேண்டாம். எளிய முறைகள்ள குறைந்த செலவில நீங்களே இலகுவா தயாரிக்கிற மாதிரி சொல்லிக்கொடுக்க நான் தயாரா இருக்கேன். அப்படிப்பட்ட சில பொருட்கள பத்தி நாம இந்த கட்டுரைகள்ல இனி தொடர்ந்து பார்ப்போம்.

அந்த வகையில இன்னைக்கு எள்எண்ணை தயாரிப்பது எப்படின்னு சொல்றேன். எள்எண்ணை அப்படின்னா நல்லெண்ணெய் அப்படிங்கறது எல்லாருக்கும் தெரியும். எல்லா எண்ணை பெயர்களுமே அதனது விதைகள் பெயரை தாங்கியே வரும். அப்படி இருக்க எள்எண்ணையை மட்டும் கூறும் போது நல்லெண்ணெய் என்பார்கள். இந்த எண்ணையை உபயோகிப்பதால் உடலுக்கு எந்தவிதமான தீமைகளும் கொடுக்காமல் நன்மையை மட்டுமே செய்வதால் இதற்கு நல்ல எண்ணை என்றார்கள். (இப்போது கடைகளில் வாங்கும் நல்லெண்ணைக்கு இது பொருந்தாது).

பலசரக்கு கடைகள்ள அல்லது எள் பயிர் செய்கிற விவசாயிகளிடமோ குறைந்தபட்சம் 20 கிலோ எள் வாங்கி, அதை தூசி இருந்தால் சுத்தப்படுத்தி, 2 நாள் வெயிலில் காய வைத்து விடுங்கள். இந்த அளவு எள்ளுக்கு ஒரு கிலோ கருப்பட்டி என எடுத்துக்கொண்டு, அதனை எண்ணை அரைக்கிற மில்லுக்கு கொண்டு செல்லுங்கள். எல்லா ஊர்களிலும் எண்ணை அரைக்கிற மில் இருக்கும். சில இடங்கள்ள அரிசி அரைக்கிற மில்லோட சேத்து வச்சிருப்பாங்க. அப்படி இல்லைன்னா உங்க ஊர் ரைஸ் மில் காரர்ட்ட கேட்டா அது எங்க இருக்குன்னு சொல்லிடுவாங்க. அப்படி ஒரு மில்ல தேர்ந்தேடுத்துக்கோங்க. அதுல கொண்டு போயி இந்த எள், கருப்பட்டியை கொடுத்து அரைத்து அதிலிருந்து கிடைக்கும் எண்ணையை வாங்கிக்கொள்ளுங்கள். இதற்கு அவர்கள் குறைந்த பட்ச கூலியே கேட்பார்கள்.

அரைத்து கிடைத்த எண்ணையை வீட்டிற்கு கொண்டு வந்து, ஒரு சில்வர் பாத்திரத்தில் ஊற்றி ஒரு சிறிய துண்டு கருப்பட்டியை அதனுடன் போட்டு சில்வர் பாத்திரத்தின் வாய் பகுதியை வெள்ளைத்துணியால் வேடு கட்டிக்கொள்ளுங்கள். அதை இரண்டு நாட்கள் வெயிலில் வைத்து விடுங்கள். மூன்றாம் நாள் நமக்குத்தேவையான சுத்தமான எண்ணை நன்றாக தெளிந்து இருக்கும். இப்போது அதை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். நீங்கள் எவ்வளவு எள் வாங்கிக்கொண்டீர்களோ அதில் நாற்பது முதல் நாற்பத்தி ஐந்து சதவீதம் எண்ணை கிடைக்கும். அதாவது, 20 கிலோ எள்ளுக்கு 8 முதல் 9 கிலோ எண்ணை கிடைக்கும். இது நம் கண் முன்னாலே நாமளே தயாரித்த ஆரோக்கியமான எண்ணை. இதற்கென செலவும் அதிகம் கிடையாது. கிட்டத்தட்ட நீங்கள் வெளியில் வாங்கும் எண்ணையின் செலவுத்தொகையே இதற்கும் ஆகும். ஆனால் மருத்துவ செலவு மிச்சமாகும் என்பது உண்மை. இதை மாதம் ஒருமுறை வெயிலில் வைத்து எடுத்துக்கொள்ளவும். ஒரு வருடம் வரை கெட்டுப்போகாமல் இருக்கும் நாம் தயாரித்த இந்த நல்லெண்ணெய்.

இப்படி 'இரும்பு இயந்திரத்தில்' வைத்து எண்ணை அரைத்து எடுப்பது என்பது சிறப்பு. எண்ணையை ;கல் செக்கில்' வைத்து எடுப்பது என்பது மிக சிறப்பு. சில இடங்களில் 'மர செக்கு' இருக்கும். அதில் அரைத்து எடுப்பது என்பது மிக மிக சிறப்பு. ஏன் சொல்கிறேன் என்றால், இரும்பு இயந்திரத்தில் அரைத்து எடுக்கும் போது அதிக உஷ்ணத்தில் அரைக்கப்படும். கல் செக்கில் என்றால் அதை விட குறைவான உஷ்ணத்திலும் அதுவே மர செக்கில் எனும் போது மிக மிக குறைவான உஷ்ணத்திலும் அரைக்கப்படுகிறது. உஷ்ணம் அதிகமாக அதிகமாக எண்ணையில் இருக்கும் உயிர்ச்சத்துக்கள் குறைந்து போகும். கடைகளில் கிடைக்கும் எண்ணை, அதை தயாரிப்பவர்கள் பெரிய இயந்திரத்தில் வைத்து மிக மிக அதிக உஷ்ணத்தில் தயாரிக்கிறார்கள். எனவே, அதில் உயிர் சத்துக்கள் என்பது சுத்தமாக இருக்காது. மேலும் ரீபைண்டு என்ற பெயரில் அதில் உள்ள பிற சத்துக்களையும் உறிஞ்சி எடுத்து விடுகிறார்கள். நாம் அதை உபயோகபடுத்தினால் நமக்கு எந்த லாபமும் இருக்காதுதானே. ஆகவே இதை ஒப்பிடும் போது, நாம் தயாரித்த எண்ணை ஆயிரம் மடங்கு உயர்ந்தது.

மர செக்கு, கல் செக்கு, இயந்திர செக்கு
இதில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால், கடைகளில் எள் வாங்கும்போது எண்ணை தயாரிக்க என்று கேட்டு வாங்குங்கள். ஏனென்றால் சில எள் பொக்கு எள்ளாக இருக்கக்கூடும். அப்படிப்பட்ட எள்ளை கண்டிப்பாக தவிர்த்துவிடுங்கள். வாங்கிய எள்ளை கண்டிப்பாக வெயிலில் 2 நாட்கள் காயப்போட வேண்டும். எண்ணை எடுத்த பின்னரும் எண்ணையை 2 நாட்கள் வெயிலில் வைத்து எடுக்க வேண்டும்.

தனிப்பட்ட ஒருவரால் இது முடியவில்லை என்றால், அப்பகுதியில் இருக்கும் ஒருவர் தேவையான நபர்களுக்கு இதனை செய்து கொடுத்து சிறிதளவு வருமானம் ஈட்டிக்கொள்ளலாம். தயவு செய்து இதை ஒரு சேவையாக செய்யவும்.

சரி. இதை உபயோகப்படுத்துவதால் நமக்கு என்னென்ன பயன் என்று பார்க்கலாம்.
காலையில் எழுந்து பல் தேய்த்த பின்னர், இருபத்தைந்து மில்லி எண்ணையை வாயில் ஊற்றி இருபது நிமிடம் அப்படியே வாய்க்குள்ளேயே வைத்திருந்து பற்களுக்கிடையே நன்றாக படும்படி கொப்பளிக்க வேண்டும். வாயில் இருக்கும் எண்ணையானது தனது வழுவழுப்பு தன்மை நீர்த்துப்போய், நுரைத்து வெண்மை நிறமாக மாறி இருக்கும். அப்போது அதை வெளியே கொப்பளித்து விடவேண்டும். இப்படி செய்வதால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள், அரிப்பு போன்றவை நீங்கிவிடும். உள் உறுப்புகள் பலம் அடையும். நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும். பல் வலி, ஈறு வீக்கம், தலை வலி சரி செய்யப்படும். இது ஒரு சர்வ ரோக நிவாரணி ஆகும். இதை ஆண்டாண்டு காலமாக நம் முன்னோர்கள் உபயோகிப்படுத்தி வந்தது. இப்போது ஆயில் புல்லிங் என்ற பெயரில் பிரபலமாகிக்கொண்டு வருகிறது.

வாரம் ஒருமுறை எண்ணையை தேய்த்து குளித்து வந்தால் தோல் நோய்கள் ஏற்படாது. தோல் மினுமினுப்புடன் இருக்கும். உடலில் உஷ்ணம் தணிந்து உள் உறுப்புகள் நன்றாக வேலை செய்யும்.

எண்ணை தேய்த்து குளிக்கும் போது அதனுடன் சிறிதளவு வெங்காயம், சீரகம், ஐந்து மிளகு, சிறிதளவு நைத்த இஞ்சி துண்டு சேர்த்து சூடு படுத்தி ஆறிய பின்னர் உடல் முழுதும் நன்றாக தேய்த்து சுமார் ஒரு மணி நேரம் ஊற வைத்து சீயக்காய் தேய்த்து குளித்து வந்தால் உடல் புதுப்பொலிவுடன் ஆரோக்கியமாக இருக்கும். நம் முன்னோர்கள் இம்முறையை பயன்படுத்திதான் ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் இருந்ததாக கூறுவார்கள்.

அதிகமான கால்சியம் சத்து இதில் உள்ளது என்பதால் கால்சிய சத்து குறைபாடு உள்ளவர்கள் தினமும் ஒரு டீஸ்பூன் நேரிடையாக குடிப்பதால் அந்த குறைபாடு நீங்கும்.

பெண்களுக்கு கால்சிய சத்து குறைபாட்டினால் எலும்புகள் பலவீனமடையும். அவர்கள் தினமும் சிறிதளவு நேரிடையாக குடித்து வந்தால் இதெற்கென எந்த மருத்துவமும் தேவை இல்லை.

வளரும் இளம் குழந்தைகளுக்கு தினமும் சிறிதளவு நல்லெண்ணெயை குடிக்க கொடுத்து வந்தால் நோய் எதிர்ப்பு தன்மையுடன் வளர்வார்கள்.
சமையலுக்கு அன்றாடம் பயன்படுத்துவதன் மூலம் உடலில் ஏற்படும் கொழுப்பு கட்டிகள் வர விடாது.

உடலில் வலி ஏற்பட்ட இடத்தினில் நல்லெண்ணையை தேய்த்து மசாஜ் செய்து வந்தால் வலி நீங்கும்.

சிலருக்கு அதிக உஷ்ணத்தால் அடி வயிறு வலி, சிறு நீர் பிரிவதில் சிரமம் ஏற்படும். அவர்கள் அடி வயிற்றுப்பகுதியில் எண்ணையை தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும்.

இப்போது தெரிகிறதா, வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்கு கொடு என்ற பழமொழியின் அர்த்தம். கொஞ்சம் மெனக்கெட்டு நம்ம ஆரோக்கியம் சார்ந்த விஷயங்கள்ல கவனம் செலுத்தி,நாம மட்டும் இல்லாம நம்ம சந்ததிகளையும் ஆரோக்கியமாக வளர்ப்போம். மீண்டும் ஆரோக்கியமான இன்னொரு தயாரிப்பு முறையில் சந்திப்போம். 

Share this

Artikel Terkait

0 Comment to "உணவுபொருட்களை நாமே தயார் செய்து கொள்வது எப்படி? இன்று நல்லெண்ணெய்..."

Post a Comment