Friday, August 28, 2015

பயிர்களுக்கு 'மூடாக்கு' இடுதல்


அண்ணாச்சி....

யாருப்பா அங்க ...? ஓ... ராமசாமியா .... வாப்பா.... வா... ஆமா... என்ன ஊரே திரண்டு வந்த மாதிரி எல்லாரையும் கூட்டிட்டு வந்துட்ட...?!!

ஆமாம் அண்ணாச்சி .... நீங்க சொன்னத எல்லார்கிட்டயும் சொன்னேன். முத்தம்மாவும் களை எடுக்க போறச்ச அவளுக்கு தெரிஞ்சவங்க கிட்டெல்லாம் சொன்னா.. எல்லாருக்கும் இயற்கை விவசாயம் பத்தி தெரிஞ்சிக்க ரொம்ப ஆர்வமா இருக்காங்க ... அதான் சொன்ன உடனே எல்லாரும் வந்துட்டாங்க. அங்க பாருங்க... நம்ம கோடி வீட்டு ஏகாம்பரம், பக்கத்து தெரு மணி அண்ணாச்சி, பலசரக்கு கடை முத்தண்ணே, நம்ம சங்கர வாத்தியார் பையன் செல்வம், அவன் வீட்டுக்காரி, இன்னும் அஞ்சாறு பேரு வந்திருக்கோம்.... 

அடேங்கப்பா.உண்மைலே புல்லரிக்குப்பா... இத்தனை பேருக்கு இயற்கை விவசாயத்துக்கு மாறணும்னு ஆர்வம் வந்திருக்கிறது. நல்ல மாற்றம்தான். என்னப்பா.. சரி. நாம விசயத்துக்கு வருவோம்... டேய், முருகா.., ராமசாமி உன்கிட்ட எல்லாம் சொல்லித்தான் கூப்டு வந்திருப்பான். அதனால இன்னைக்கு, 'மூடாக்கு' அப்படிங்கறத பத்தி சொல்றேன். 
இயற்கை விவசாயத்துல மூடாக்கு அப்படிங்கறது ஒரு முக்கியமான பங்கு. இப்ப நீ பயிர் போடுறப்ப, அதிக தொந்தரவு கொடுக்குறது, பயிர்களுக்கு நடுவுல வளர களைதான, அது பயிருக்கும் கேடு கொடுக்கும், நமக்கும் அதிக வேலை கொடுக்கும், அத எடுக்கணும் அப்படிங்கறதுக்கு அதிகமா செலவையும் கொடுக்கும். இந்த செலவ குறைக்கணும், நம்ம வேலைய குறைக்கணும் அப்படிங்கிறதுக்கு இந்த மூடாக்கு நமக்கு உதவுது....
ஏய்... ராமசாமி., பாத்துக்க... இன்னொரு செலவ குறைக்க போறேன்.

அண்ணாச்சி... இன்னும் கொஞ்சம் வெளக்கமா சொல்லுங்களேன் ...

சொல்றேன். மூடாக்கு அப்படிங்கறது பல முறைகள் இருக்கு... முக்கியமா தேவையான சிலது மட்டும் சொல்றேன்.
  • மண் மூடாக்கு.
  • இலை, தழை மூடாக்கு.
  • உயிர் மூடாக்கு.
இதுல மண் மூடாக்கு அப்படிங்கறது, கோடை நேரத்துல நம்ம நிலத்துல செய்ற கோடை உழவு. இதனால மண்ணோட மேல் மட்டம் மூடாக்கா செயல்பட்டு, மண்ணுல இருக்குற ஈரப்பதத்த காப்பாத்துது. அதுபோக, கோடை மழை பெய்யும்போது அந்த மழை நீரை சேமிக்கவும் செய்து.



அடுத்தால, இலை, தழை மூடாக்கு போடுறது பத்தி சொல்றேன். நாம வயல்கள்ள பயிர் செய்யும் போது பொதுவா பாத்தி கட்டித்தான் செய்வோம். அப்படி செய்யாம, மேட்டுபாத்தி முறையில நிலத்த அமைச்சி, பயிர் செய்யும் போது மேட்டுப்பாத்தியில் நடவு செய்வோம். அப்படி நடவு செஞ்சு, ஒரு மாசத்துல பயிர் நல்லா வளர ஆரம்பிக்கும். அப்போ, மேட்டுப்பாத்தியில் பயிர்களுக்கு இடையில் காய்ந்த இலை, தழை, சருகு, வைக்கோல் இதுமாதிரியானதை மூடாக்கா போடணும். இது மூணு இஞ்சு உயரத்துக்கு இருக்கணும். மூடாக்கை தாண்டி வளரக்கூடிய ஒரு சில களைசெடிகளை நம்ம கையாலே புடுங்கி போட்டுறனும்.
இந்த மூடாக்கு, களை வளராம இருக்குறதுக்கு அப்படின்னு மட்டுமில்லாம, தண்ணீர் சிக்கனமும் இதன் மூலமா பாத்துக்கலாம். எப்படின்னா., ஒவ்வொரு மேட்டுப்பாத்திக்கும் இடையில் தண்ணீர் பாச்சுரதுக்கு வாய்க்கால் அமைப்போம். அப்படித்தான. இப்போ, ஒரு மாதத்துக்கு எல்லா வாய்க்கால்களிலும் தண்ணீர் சீராக பாய்ச்சனும். அதுக்கப்புறம், ஒரு வாய்க்கால் விட்டு ஒரு வாய்க்கால் அப்படிங்கற மாதிரி தண்ணீர் பாய்ச்சனும். அப்படி தண்ணீர் பாய்ச்சாத வாய்க்கால்ல மூடாக்கு போட்டுறனும். இதுல தண்ணீர் செலவு பாதியா மிச்சப்படுது.
அடுத்தால, நாம பாச்சுற தண்ணியில அறுபது சதவீதம் வீணா ஆவியாத்தான் போகுது, ஆனா, நாம போடுற இந்த மூடாக்கால, தண்ணீர் ஆவியாகி போறது ரொம்ப குறைஞ்சிருது. இப்படி இரண்டு வகையில தண்ணீர் செலவ நாம மிச்சப்படுத்திக்கலாம். இதனால கொஞ்சம் கூடுதலான இடத்துல விவசாயம் பாத்துக்கலாம்.
சரி. அப்புறம், மூடாக்கு போடுறதால, மண்ணுல தொடர்ந்து ஈரப்பதம் இருந்துட்டே இருக்கும், இப்படி ஈரப்பதம் இருக்குறதால, நிலத்துல மண்புழுக்களும் அதிகமா உருவாகுது. இதனால பயிர்களுக்கு நெறைய நன்மைகள் கிடைச்சிபோயிருது.

நம்ம நிலத்துலதான் மண்புழுக்களே பாத்தது இல்லையே, இதுக்காக நான் என்கியாவது போயி புடிச்சிட்டா வரணும்...?

அதான் நீங்க ரசாயன உரத்த கொட்டி, விஷத்த தெளிச்சி, மண்புழுக்களையும், நுண்ணுயிரிகளையும்..., ஏன், நெலத்தை கூட கொன்னுட்டிகளே... நீங்க வெளிய இருந்து புடிச்சிலாம் கொண்டு வரவேண்டாம். அது தானாவே வரும். எப்படின்னா, நாம ஏற்கனவே நிலத்தில அமிர்த கரைசல் பாய்ச்சிட்டு இருக்கோம்லா, அந்த வாசத்துக்கு பூமிக்கு அடியில உள்ள மண் புழுக்கள் எல்லாமே மேல ஓடி வந்துரும். அப்படி ஓடி வர மண்புழுவை திரும்ப திரும்ப வர வைக்கிற சூழ்நிலை இந்த மூடாக்கு போடுறதால கிடைக்கும். இன்னொரு விஷயம் என்னன்னா, மன்புழுக்களுக்கு இருட்டான சூழ்நிலை ரொம்ப புடிக்கும். மூடாக்கு போடுறதால, இருட்டா இருக்குமா, மண்புழுக்களுக்கு அந்த நிலம் ரொம்ப புடிச்சிபோயிரும். நாம ஏற்கனவே அமிர்த கரைசலை நிலத்துக்கு பாச்சுரதாலயும், மூடாக்கு போடுறதாலயும் குறிப்பிட்ட நாளிலேயே மண்புழுவோட எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பிச்சிடும். ஒரு சதுர அடியில நாலு மண்புழுக்கள் இருந்தா, ஒரு எக்டேருக்கு இரண்டு லட்சம் மண்புழுக்கள் இருக்கும்.

மண்புழுக்கள் வரதால நமக்கு என்ன பயன் அண்ணாச்சி...?

நம்ம நிலம் வெப்பமா இருக்குறதால, இந்த மண்புழுக்கள் ஐந்து அடி ஆழத்துல, சும்மா கம்ம்னு உக்காந்துருக்கும். மூடாக்கு போடும்போது, நிலம் ஈரப்பதமா இருக்கும். இப்படி ஈரப்பதமா இருக்குறதால, அது எல்லாமே மேல எந்திச்சி வரும். மேல வரும் போது மண்ணை சாப்பிட்டுட்டே வரும். மேல வந்து, எச்சத்தை கொட்டிட்டு போயிரும். திரும்பவும் கீழ போகும். மறுபடி மேல வரும். இப்படி நாள் முழுதும் மேலயும் கீழயும் போயிட்டும், வந்துட்டுதான் இருக்கும்.


அது மேலயும் கீழயும் போறதுனால நமக்கு என்ன லாபம் அண்ணாச்சி...?

அவ்வளவு மண்புழுக்களும், மேலயும் கீழயும் போயிட்டு வந்தா, நம்ம நிலத்துல ஓட்டைகள் அதிகமாகி காற்றோட்டம் ஏற்படுது. நிலமும் பொலபொலப்பு தன்மை ஆகிரும். இதனால நாம பாச்சுற தண்ணீர, மண்ணு நல்லா உறிஞ்சி வச்சிக்கிடும். மழை பெய்யும் போது மழைத்தண்ணி எல்லாமே நிலத்த விட்டு வெளிய வீணா போகாம, நிலத்துக்குள்ளேயே இலகுவா போயிடும். இதனால நிலத்தடி நீரும் கூடிரும். இதுபோக, மண்ணுல ஈரப்பதமும், காற்றோட்டமும் நல்லா இருக்குறதால, நுண்ணுயிரிகள் வேலை செய்து, நாம போடுற மூடாக்கை சீக்கிரமே மக்க வைக்குது. இந்த மக்கின் மூலம் பயிர்களுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்குது. மண்புழுக்கள் மேல வந்து அதோட எச்சத்தை போடுதுன்னு சொன்னேன்ல, அந்த எச்சம் கூட நம்ம பயிர்களுக்கு மிக சிறந்த உரம். அதனால மண்புழு உரம் வெளியில பணம் கொடுத்து வாங்கி நிலத்துக்கு போட வேண்டிய அவசியமில்லை. இதுவரைக்கும் உங்களுக்கு புரிஞ்சிதா...? புரியலைன்னா அப்புறமா வந்து சந்தேகம் கேளுங்க. சொல்றேன்.

ஆமாம் அண்ணாச்சி... புரிஞ்சுது. அப்புறம், இதனால வேற ஏதும் பயிருக்கு நன்மை இருக்குமா அண்ணாச்சி..?

இருக்கு. இப்ப நான் சொல்ல போறத நல்லா கவனிங்க. ஒரு செடி, தான் வளரதுக்கு தேவையான தண்ணீர வேர்களின் மூலம் நேரிடையாக எடுக்காது. காற்றும் ஈரப்பதமும் கலந்த மூலக்கூறுகளாகத்தான் எடுக்கும். இந்த தன்மை மூடாக்கு மூலமாதான் கிடைக்கும். ஈரப்பதமா நிலம் இருக்குறதாலயும், மண்ணுக்குள்ள காற்றோட்டம் இருக்குறதாலயும்தான் இந்த செயல் நடக்கும். தேங்கி நிற்கும் அளவுக்கு நீரை அதிகமாக பாய்ச்சினால் இந்த செயல் நடக்காது. நுண்ணுயிரிகளும் வேலை செய்யாது. பயிர்களுக்கு தேவையான சத்துக்களும் அங்கே கிடைக்காது. செடிகளில் உள்ள பூக்களும், பிஞ்சிகளும் உதிர ஆரம்பிச்சிடும். செடிகளோட வளர்ச்சியும் இதனால தடை பட்டு போயிடும்.

மூடாக்குல இன்னொரு வகை உண்டு. அதுக்கு பேரு உயிர் மூடாக்கு.
நான் ஏற்கனவே உங்ககிட்ட சொல்லிருக்கேன், பயிருக்குத் தேவையான தழைச்சத்தும் இயற்கையா காற்று மூலமாவே பயிருக்கு கிடைச்சிடுது. நீங்கதான் தேவை இல்லாம தழைச்சத்துக்குன்னு சொல்லி ரசாயன உரம் போட்டு காசை வீணாக்கிட்டு இருக்கீங்க. இந்த இயற்கையாவே காத்துல இருக்குற சத்துக்களை மண்ணுக்குள்ள கொண்டுபோய் சேர்க்கக்கூடிய சக்தி இரு வித்திலை தாவரம் அப்படின்னு சொல்லக்கூடிய பருப்பு வகை தாவரத்துக்கு உண்டு.  அதாவது துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, நிலக்கடலை இந்த மாதிரி எல்லா பருப்பு வகை தாவரத்துக்கு அந்த சக்தி உண்டு. அதனால இந்த மாதிரியான பயிர்களை ஊடு பயிரா போடணும். அப்படி செய்யரதால அது நம்மோட பயிர்களுக்கு தேவையான தழைச்சத்துக்களை காத்துல இருந்து எடுத்து மண்ணுல சேத்துக்கிடுது. இந்த ஊடு பயிர்கள் மூலமா கூடுதலான வருமானமும் நமக்கு கிடைச்சிடுது. இது போக நான் ஏற்கனவே சொல்லிருந்த மாதிரி, அமிர்த கரைசல் கரைக்கிரதுக்கு தேவைப்படுற மாவை நாம வெளிய காசு கொடுத்து வாங்காம ஊடு பயிரோட தானியத்துல இருந்து எடுத்துக்கலாம்.  என்ன வள்ளியம்மா, நான் சொல்றது உனக்கும் புரியுதுல்லா?

புரியுது அண்ணாச்சி ...

ஆமா புரியுதுன்னு சொல்லிட்டு தலையாட்டிட்டு அப்புறம் தலைய சொரிஞ்சிட்டு நிக்காத. எல்லாரும் நல்லா கவனிங்க... உங்களுக்கு சந்தேகம் அப்படிங்கறது இப்ப வராது, வேலைய ஆரம்பிக்கும் போதுதான் அதிகமா சந்தேகம் வரும். யாருன்னாலும், எப்பன்னாலும் என்கிட்டே உங்க சந்தேகத்த கேட்டுக்கலாம். போன்ல எப்ப வேணும்னாலும் கூப்பிடுங்க. உடனே அது எப்படி என்ன யாதுன்னு உங்க சந்தேகத்த தீர்த்து வச்சிடுறேன். அடுத்ததா உங்களுக்கு பயிர் பாதுகாப்பு முறைகளை பத்தி சொல்ல போறேன். இதுவும் உங்க செலவ குறைக்கிரதுல முக்கியமான பங்கு இருக்கு. நீங்க எல்லாரும் சாப்பிட்டுட்டு சாயுங்காலம் வாரீங்களா?

சரிங்க அண்ணாச்சி.... உங்க கிட்ட பேசிட்டு இருந்ததுல நேரம் போனதே தெரியல்ல. நாங்க போயிட்டு வந்துடுறோம் அண்ணாச்சி....

Monday, August 24, 2015

வீட்டுத்தோட்டத்தில் கீரை வளர்ப்பது எப்படி?

சென்ற பதிவில் வர்த்தக ரீதியாக விவசாய நிலத்தில்
கீரைத்தோட்டம் பயிரிடுவது பற்றி பார்த்தோம்.
இந்த பதிவில் வீட்டுத்தோட்டத்தில் கீரை வளர்ப்பு பற்றி கூறுகிறேன்.

உங்கள் வீட்டுத்தோட்டத்தில் இடத்திற்கு தகுந்தாற்போல் (இரண்டுக்கு இரண்டு அடி என்றோ,மூன்றுக்கு மூன்று அடி என்றோ அல்லது இரண்டு அல்லது மூன்றுஅடி  அகலத்தில், தேவையான நீளத்திற்கோ) சிறு சிறு மேட்டுப்பாத்திகளாக (தரையிலிருந்து சுமார் அரை அடி உயரத்தில்) அமைத்துக்கொள்ளவேண்டும். உங்கள் விருப்பத்திற்கிணங்க இதில் நீங்கள், தண்டுக்கீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணிகீரை, பாலாக்கீரை, வெந்தயக்கீரை, பசலைக்கீரை போன்ற ரகங்களில் எதனை வேண்டுமானாலும் பயிரிட்டுக்கொள்ளுங்கள். ஒவ்வொரு பாத்தியிலும் ஒவ்வொரு ரகங்களையும் பயிரிடலாம்.



கீரைத்தோட்டத்தை சுற்றிலும் வரப்பு ஓரங்களில் அகத்திகீரை செடிகள்  நடவும். பாத்திகளின் வரப்புகளில் கொத்தமல்லி செடியின் விதைகளை ஊடுபயிராக பயிர் செய்யலாம்.

கீரைத்தோட்டத்தின் வெளிப்புறம் சுற்றிலும் சாமாந்திப்பூ செடியினை பயிரிடுங்கள் (இது பூச்சிகளை கீரை பயிரிட்ட பாத்திகளுக்குள் வரவிடாமல் தடுத்து வேலி போல் செயல்படும்).

கீரை விதைகளை சலித்த மணலுடன் கலந்து, பாத்திகளின் மேல் சீராக தூவி விடவும். பின்னர் கைகளால், மேல் மண்ணை மூடிவிடவும். பூவாளி கொண்டு தண்ணீரை பாத்திகளின் மீது மெதுவாக தெளிக்கவும்.

மூன்றாம் நாள் மீண்டும் பாத்திகளில் நீர் தெளித்து விடவும். ஒரு வாரம் கழித்து, கீரைகள் முளைத்து வந்திருக்கும். கூடவே ஒரு சில களைகளும் முளைத்திருக்கும். தேவையில்லாமல் முளைத்திருக்கும் அவ்வகை களைகளை கைகளால் பறித்து அகற்றிவிடவும். தொடர்ந்து, இரண்டு அல்லது மூன்று நாள் இடைவெளியில் மண்ணின் ஈரப்பதத்தை பொறுத்து, நீர் தெளித்து வரவும். இருபத்தி ஐந்து நாள் முதல் முப்பது நாட்களுக்குள் கீரைகள் அறுவடைக்கு தயாராகிவிடும்.

வெந்தயக்கீரை, தண்டுக்கீரை ஆகியவை ஒருமுறை மட்டுமே அறுவடை செய்யக்கூடியது. அறுவடைக்குப்பின் விதைகளை  மீண்டும் தூவி பயிர் செய்திடலாம். மற்ற கீரை ரகங்களை, இருபத்தி ஐந்து நாள் இடைவெளியில் தொடர்ந்து அறுவடை செய்து வரலாம். (பத்து மாதங்கள் கழித்து தோட்டம் முழுதும் சுத்தப்படுத்தி, மீண்டும் இதே போல் விதைகள் விதைத்து அறுவடை செய்து வரலாம்).

அமிர்தக்கரைசல் பற்றியும், தயாரிப்பு முறைகள் பற்றியும் ஏற்கனவே நமது பதிவில் பதிவிட்டுள்ளோம். அப்படி தயார் செய்திட்ட அமிர்தக்கரைசலை பூவாளியால் தண்ணீரை பயிருக்கு பாய்ச்சும் போது, பத்து லிட்டர் தண்ணீருக்கு ஐநூறு மில்லி கரைசல் என்ற விகிதத்தில் கலந்து விடவும். இது மட்டுமே போதும். வளர்ச்சி ஊக்கிக்காக வேறு உரமோ, டானிக்கோ கீரைகளுக்குத் தேவையில்லை. தேவையில்லாமல் அதிகமாக செலவு செய்ய வேண்டாம்.

அமிர்தக்கரைசல் தயாரிக்க இடுபொருட்கள் கிடைக்காத பட்சத்தில் அல்லது தயாரிக்க இயலாத சூழ்நிலையில் இருப்பவர்கள், E.M.(Effective Micro Organism) கரைசலை தயாரித்து பயன்படுத்திக்கொள்ளலாம். இதைத்தயாரிப்பது என்பது, மிகவும் எளிதான ஒன்று. அது எப்படி என்பதைத்தொடர்ந்து காண்போம்.

E.M. கரைசல் தயாரிக்கும் முறை :

  1. கனிந்த நாட்டு வாழைப்பழம்                       - 1 கிலோ
  2. பரங்கிபழம்                                                           - 1 கிலோ
  3. பப்பாளிப்பழம்                                                     - 1 கிலோ
  4. நாட்டுச்சக்கரை (உருண்டை வெல்லம்) - 1 கிலோ
  5. நாட்டுக்கோழி முட்டை                                  - 1 எண்ணம்


மூடியுடன் கூடிய ஒரு சிறிய பிளாஸ்டிக் பேரல் எடுத்துக்கொள்ளவும். முதலில் கூறிய பழங்கள் மூன்றையும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதில்  போடவும். நாட்டுச்சர்க்கரையை நன்றாக பொடி செய்து அதையும் சேர்த்துக்கொள்ளவும். நாட்டுக்கோழி முட்டையை உடைத்து ஓட்டுடன் உள்ளே போடவும். இவை அனைத்தும் மூழ்கும் அளவுக்கு பேரலில் தண்ணீர் ஊற்றி, அதன் பின், காற்றுப்புகாதவாறு பேரலை இறுக்கமாக மூடி விடவும். கண்டிப்பாக கலக்குதல் கூடாது. இவ்வாறு நாம் தயாரித்த கரைசலை சூரிய ஒளி படாதவாறு நிழற்பாங்கான இடத்தினில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். முப்பது நாட்கள் கழித்த பின்பு மூடியை திறந்து பார்க்கவும். உள்ளே கரைசலின் மேலே வெண்மை நிற படலம் ஒன்று இருக்கும். இதுதான் நாம் தயாரித்த கரைசல் நன்றாக வந்திருக்கிறது என்பதற்கான சான்று. அப்படி வெண் படலம் வரவில்லை என்றால், கால்கிலோ நாட்டுச்ச்சக்கரையை பொடி செய்து, மீண்டும் அந்த கரைசலுடன் சேர்த்து பேரலை மூடிவிடவும். இப்படி மூடிய பின் அதிலிருந்து பதினைந்து நாள் கழித்து கரைசலை எடுத்து பயன்படுத்தலாம். தேவையான அளவு கரைசலை மட்டும் எடுத்து, வடிகட்டி பயன் படுத்தவும் .மீண்டும் பேரலை நன்றாக மூடி விடவும். இந்த கரைசலை 300 மி லி. அளவு எடுத்து, பத்து லிட்டர் தண்ணீருடன் கலந்து பூவாளி மூலம் பாசனம் செய்யலாம். இது மண்ணில் கலந்து நன்மை செய்யும் நுண்ணுயிரிகளை பெருக்கி, பயிருக்குத்தேவையான அனைத்து சத்துக்களையும் கொடுக்கும். இலைகளின் மீது படுவதனால்செடிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.  வளர்ச்சியும் நன்றாக இருக்கும்.

பூச்சிகள் வண்டுகள் தென்பட்டால் மட்டும், மூலிகை பூச்சி விரட்டியை தெளிக்கவும். அது தயாரிக்கும் முறையையும் இப்போது பார்ப்போம்.

மூலிகை பூச்சி விரட்டி :
இஞ்சி, பூண்டு, மிளகாய் - சம அளவு எடுத்து, தனித்தனியாக அரைத்து கொள்ளவும்.பின் இவை மூன்றையும் கலந்து கொண்டு, அதை ஓர் இரவு முழுதும் வைத்திருத்தல் வேண்டும். பின்பு அதனை துணியால் வடிகட்டி, 500 மில்லி அளவிற்கு, 10 லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து இலைகளின் மேல் நன்றாக தெளித்துவிட வேண்டும்.

குறிப்பு: தோட்டத்தில் நீங்கள் பயிரிட்டிருக்கும், காய்கறி செடிகள் மற்றும் அனைத்து விதமான பயிருக்கும், இந்தக்கரைசல்கள் இரண்டையும் பயன்படுத்தலாம். இயற்கை முறையிலேயே பயிரிட்டு, ஆரோக்கியமான காய்கறிகளை உற்பத்தி செய்து, மண் வளத்தையும், நம் உடல் நலத்தையும் செம்மையாக வைத்திருப்போம்.

Saturday, August 22, 2015

கீரைத்தோட்டம் அமைப்பது எப்படி..?

நண்பர்கள் பலர் என்னிடம் கீரைத்தொட்டம் அமைப்பது எப்படி?
என்பது பற்றியான வினாக்களைத்தான் அதிகம் தொடுக்கிறார்கள்...
அவர்களுக்காக இந்த பதிவினை வெளியிடுகிறேன்....

நிலம் தயாரிப்பு முறை :
முதலில் கீரைத்தோட்டம் போடுவதற்குண்டான நிலங்கள் பாசன வசதியுடன் கூடிய மேட்டுப்பாங்கான இடமாக இருக்க வேண்டும். குறைந்த பட்சம் பத்து சென்ட் நிலமாவது இருத்தல் வேண்டும்.

தேர்வு செய்திட்ட நிலத்தை நன்றாக இரண்டு முறை உழவு செய்து, நிலத்தில் உள்ள செடி, செத்தைகள், குப்பைகளை அகற்றிவிட வேண்டும். கட்டிகள் நீங்க பரம்பு அடிக்க வேண்டும். பின்பு பத்து சென்ட் நிலத்திற்கு ஒரு டன் தொழு உரம் இட வேண்டும். அதன் பிறகு ஒரு உழவு ஓட்டி ஒரு கிலோ வேப்பம் புண்ணாக்கு தூவி மீண்டும் நன்றாக பரம்பு அடிக்கவும்.



அந்த இடத்தில் ஐம்பது சதுர அடி பாத்திகளாக பிரித்து போடவும். (மொத்தமுள்ள இடத்தில் எத்தனை வகை கீரைகள் பயிரிடுகிறமோ அதற்கு தகுந்தார்போல பிரித்துக்கொள்ளலாம்). ஒரு பாத்திக்கு இருபத்தி ஐந்து கிராம் விதைகளை நன்றாக சலித்த மணலுடன் கலந்து தூவ வேண்டும். பின்பு, கைகளால் பாத்திகளின் மேல் மண்ணை லேசாக மூடி விடவும். இப்போது மெதுவான வேகத்தில் நீர் பாய்ச்ச வேண்டும்.

மூன்று நாள் சென்ற பின் மீண்டும் நிலத்திற்கு நீர் பாய்ச்ச வேண்டும்.

ஒரு வாரம் கழித்து, களை பறித்து, மீண்டும் நீர் பாய்ச்சுதல் வேண்டும்.

தண்ணீர் பாய்ச்சுதல் என்பது, அதிகமாக நீர் தேங்காத அளவுக்கும், கீரைகள் அதிக வாட்டம் அடையாத அளவுக்கும், மண்ணில் லேசான ஈரப்பதம் இருக்குமளவிற்கும் இருத்தல் வேண்டும். அவ்வப்போது தோன்றும் கலைச்செடிகளை கைகளால் மட்டும் அகற்றி விடுதல் வேண்டும்.

கீரை ரகங்கள்:
ஒரு முறை மட்டும் அறுவடை செய்யும் ரகங்கள்:

  • தண்டுக்கீரை
  • சிறுகீரை
  • முளைக்கீரை
  • வெந்தயக்கீரை

மேற்கண்ட கீரை ரகங்கள் விதைத்து இருபத்தி ஐந்தாம் நாள் முதல் அறுவடைக்கு தயாராகிவிடும். அறுவடை செய்தபின், அதில் லேசாக நிலத்தை மண்வெட்டியால் கொத்தி சமப்படுத்தி, மீண்டும் அதே போல் விதைகளை தூவி நீர் பாசனம் செய்யவும்.

ஒருமுறை விதைத்து ஆறு மாதங்கள் அறுவடை செய்யும் ரகங்கள்:

  • அரைக்கீரை
  • பொன்னாங்கண்ணி கீரை
  • பாலாக்கீரை

மேற்கண்ட கீரை ரகங்கள் முப்பதாம் நாள் அறுவடைக்கு தயாராகிவிடும். இந்த கால இடைவெளியில் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு  அறுவடை செய்யலாம். ஆறு மாதங்கள் கழித்து, நிலத்தினை செப்பனிட்டு மீண்டும் கீரை பயிர் செய்யலாம்.

கீரைப்பாத்திகளின் வரப்புகளில் தகுந்த இடைவெளியில் கொத்தமல்லி கீரையினை பயிர் செய்யலாம். இது ஒருமுறை மட்டுமே பயிரிட்டு அறுவடை செய்யும் ரகம்.

தோட்டத்தை சுற்றிலும் நான்கு புறமும் செடி முருங்கை நடவு செய்யலாம்.

தோட்டத்தை சுற்றிலும் வரப்பு ஓரங்களில் அகத்திகீரைகளை நடவு செய்யலாம்.


பயிர் பாதுகாப்பு முறை:
கீரைகளை தாக்கும் வண்டுகள், பூச்சிகளை கட்டுப்படுத்த இயற்கை வழிமுறைகளை மட்டுமே கடைபிடிக்கவும். கீரை தோட்டத்தினை சுற்றிலும் சாமந்திப்பூ செடிகளை நடவு செய்யவும். இது ஏனென்றால், பூச்சிகளையும், வண்டுகளையும் மஞ்சள் நிற பூக்கள் அதிகம் கவரும். அதனால் கீரைகளை அதிகம் தாக்காது.

அதையும் தாண்டி சில பூச்சிகள் கீரைகளை தாக்கினால், இயற்கை பூச்சி விரட்டி மூலம் விரட்டி விடலாம். பூச்சி விரட்டிகளை இயற்கை முறையில் தயாரிப்பது எப்படி என்பதையும் இப்போது பார்ப்போம்.

பச்சை மிளகாய்,  இஞ்சி,  பூண்டு - இவை மூன்றையும் சம அளவுகள் எடுத்து, நன்றாக அரைத்துகொள்ளவும். இந்த விழுதை, அதன் சம அளவிற்கு மாட்டு சிறுநீருடன் கலந்து,  ஒரு நாள் இரவு முழுவதும் வைத்திருக்க வேண்டும். அந்த கரைசலை மறுநாள் காலையில் துணி மூலம் நன்றாக வடிகட்டி எடுக்க வேண்டும். பின்பு, முன்னூறு மில்லி கரைசலுக்கு, பத்து லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து கீரை செடிகள் மீது நன்றாக படும்படி தெளித்து விடுதல் வேண்டும். பத்து நாட்கள் அல்லது பதினைந்து நாட்கள் இடைவெளியில் பூச்சிகளின் தாக்கத்தினை பொருத்து  இதனை தெளிக்க வேண்டும். இந்தக்கரைசலானது, ஒரு ஏக்கர் நிலத்திற்கு மூன்று லிட்டர் தேவை. நீங்கள் பயிரிடும் நிலத்தின் அளவிற்கு ஏற்ப தயாரித்துக்கொள்ள வேண்டும். ஒரு முறை தயாரித்த கரைசலை உடனே பயன்படுத்தி விட வேண்டும். இருப்பு வைத்து பயன்படுத்த முடியாது. கண்டிப்பாக இந்த முறையின் மூலம் பூச்சி, வண்டுகளின் தாக்கம் மட்டுப்படுத்தப்படும். (பூச்சி தாக்குதல் தெரிந்தால் மட்டுமே இந்த கரைசலை தெளிக்கவும்).

அறுவடைக்கு தயாரான கீரைகளை அறுவடை செய்தபின், உங்கள் ஊரின் சந்தை நிலவரத்திற்கேற்ப விலை நிர்ணயம் செய்து, நேரடி விற்பனை செய்வதின் மூலம் அதிக லாபம் பெறலாம்.

நீர்ப்பாசனம் செய்யும்போது தண்ணீருடன் அமிர்தக் கரைசலையும் சேர்த்து பாசனம் செய்திட்டால், கீரைகளுக்கு எந்த ஒரு உரமும் இட வேண்டிய அவசியம் இல்லை.

பத்து நாட்களுக்கு ஒருமுறை நூறு லிட்டர் தண்ணீரில் ஐந்து லிட்டர் வடிகட்டிய அமிர்த கரைசலை கலந்து தெளித்து வந்தால் பயிர்கள் நோய் எதிர்ப்பு சக்தியுடன் செழித்து வளரும்.

குறிப்பு: அமிர்தக்கரைசலோ, பூச்சி விரட்டியோ அதிகாலை வேளையில் மட்டுமே தெளித்திடல் வேண்டும்.

கீரை விதைகளை தனியார் விதை விற்பனை நிலையங்களிலும், அரசு வேளாண் துறைகளிடமும் வாங்கிக்கொள்ளலாம்.

நீங்கள் பயிரிடும் கீரை ரகங்களில் ஒரு பாத்தியை மட்டும் விதைக்காக ஒதுக்கி, வளரவிட்டு, விதை வைத்த பின், செடியை பறித்து, வெய்யிலில் நன்றாக இரண்டு நாட்கள் காய வைத்து, விதைகளை பிரித்து எடுக்கவும். இம்முறையில் விதைகளுக்காக மீண்டும் மீண்டும் செலவு செய்திட வேண்டாம். இருப்பு வைத்துள்ள விதைகளை மாதம் ஒருமுறை வெயிலில் காய வைத்து எடுத்து மீண்டும் இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும்.

ஐம்பது சென்ட், அல்லது ஒரு ஏக்கர் நிலத்தில் கீரை பயிரிட நினைப்பவர்கள் வாய்க்கால் பாசனம் இல்லாமல், மேற்சொன்ன அளவுகளில் மேட்டுப்பாத்தி அமைத்து தெளிப்பு நீர் பாசனம் மூலம் பயிர் செய்யலாம். இதன் மூலம், பாதி அளவு தண்ணீரே செலவாகும்.

நண்பர்களே, என்னுடைய அனுபவத்தில் தெரிந்த விசயங்களை உங்களுடன் பகிர்ந்த்துள்ளேன். வேறு ஏதும் சந்தேகங்கள் இருந்தால் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். முடிந்த அளவு சந்தேகங்களை தீர்த்து வைக்கிறேன்.

உங்கள் மேலான கருத்துக்களையும் வரவேற்கிறேன்.

Friday, August 21, 2015

அமிர்த கரைசலால் ஏற்படும் நன்மைகள்


அமிர்த கரைசல் தெளித்தல்

அதனால என்ன நன்மைகள்ன்னு கேட்டேல்லாம்மா.. சொல்றேன். கேளு...
நம்ம நெலத்துல பாசன நீர் மூலம் இந்த கரைசல பாய்ச்சுரதால, உடனே அதுல உள்ள நுண்ணுயிரிகள் மண்ணுக்குள்ள போயி தங்களோட வேலைகள ஆரம்பிச்சிடும். நான் ஏற்கனவே உன்கிட்ட சொன்ன மாதிரி நம்ம மண்ணுக்குள்ள இயற்கையாவே நெறைய சத்துக்கள் இருக்குப்பா ... அதாவது, தழை சத்து, மணி சத்து, சாம்பல் சத்து, இது போக நெறைய சத்து இருக்கு. இப்படி எல்லா சத்துக்களையும் எடுத்து பயிர்களுக்கு கொடுக்க நம்ம நுண்ணுயிரிகள் தயார் ஆகிடுது.

தயார் ஆகிடுதுன்னா என்ன அண்ணாச்சி ...?

அதாம்பா ... ஏற்கனவே சொன்னேன்ல... உன் வீட்டுல சமையலுக்கு உண்டான காய்கறிகள் எல்லாம் இருந்தாலும் யாராவது சமச்சி போட்டாதான் நம்மலால சாப்பிட முடியும்னு... அதே மாதிரிதான் இந்த நுண்ணுயிரிகள், மண்ணுக்குள்ள இருக்குற சத்துக்கள, பயிரோட வேர்கள்  எடுத்துக்குற மாதிரி மாத்தி கொடுக்குது. அதுவும் இல்லாம, மண்ணோட வளமே மக்குகள் தான். ஒரு செடியோட வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் எல்லாமே மக்குகள் கிட்டயிருந்துதான் வேர்கள் மூலமா பயிர்கள் எடுத்துக்கிடுது. அதனால, பயிர்களுக்கு இடையே மூடாக்கு போடணும். இதைப்பத்தி நான் அப்புறமா சொல்லுதேனே...  அப்புறம் இந்த மக்குகள் மூலமாவும் இன்னொரு லாபம் இருக்கு. என்னன்னா... காத்துல உள்ள ஈர பதத்த மக்குகள் உறிஞ்சி மண்ணுகள ஈரத்தன்மையோடவே வச்சிருக்கும். அரை அடியில மண்ணு மேல மக்கு இருந்துச்சி அப்படின்னா, ஒரு கிலோ மக்கு ஒரு நாளைக்கு அஞ்சு லிட்டர் தண்ணிய காத்துல இருந்து உறிஞ்சி மண்ணுல சேமிச்சி வச்சிருக்கும்பா. இதனால நமக்கு குறைவான தண்ணீரே செலவாகும்.

அப்ப மண்ணுல எப்பவும் தண்ணி நின்னுட்டேவா இருக்கும்...?

அப்படி இல்லப்பா, அந்த மண்ணு எப்பவும் ஈரப்பதமா இருக்கும்.

பாத்தியாப்பா.. இது வரைக்கும் உனக்கு செலவு எவ்வளவு மிச்சமாச்சின்னு பாத்தியா...?

ஆமாம் அண்ணாச்சி... முதல்ல நான் உரம் போடுற செலவு மிச்சமாக்கி காமிச்சீங்க. அப்புறம் தண்ணி குறைவா செலவாகும்னு சொல்லி இருக்கீங்க...

ஆமாம்பா... இன்னும் செலவு மிச்சம் பிடிக்கிறத பத்தி நெறைய சொல்றேன்.

கரைசல பாசனம் மூலமா வரக்கூடிய நன்மைகளை சொல்லிட்டீங்க. கரைசல தெளிக்கிறதால என்ன நன்மைன்னு சொல்லவே இல்லையே அண்ணே..

வரேம்மா... அத பத்திதான் அடுத்தால சொல்லனும்னு இருக்கேன்... நீ அமிர்த கரைசல தெளிக்குறதுனால, அது வளர்ச்சி ஊக்கியாக மாறி, நோய் எதிர்ப்பு சக்தி பயிருக்கு அதிகமா கொடுத்து, நல்ல மகசூலை நமக்கு தருது. அப்புறம், இலைகள் மேல இருக்குற நுண்ணுயிரிகள், காற்றில் உள்ள தழை சத்தை எடுத்து இலைகள் மூலமா பயிருக்கு கொடுக்குது. இன்னொன்னு பயிர்கள் தனக்கு வேர்கள் மூலமா கிடைக்கிற தண்ணீரை இலைகள் மூலமா நீர் ஆவியாகி போயி பயிரெல்லாம் வாடி வதங்கி போகுதுங்கறது உங்களுக்கு தெரியும்லா, அப்படி ஆவியாகி போறத இந்த இலை மேல இருக்குற நுண்ணுயிரிகள் தடுத்து நீர்ச்சத்த குறையாம பாத்துக்கிடும். இதனால பயிரும் அதிகம் வாட்டம் இல்லாம இருக்கும். அது சரி ... நீ என்ன.. ரொம்ப வாடிபோயி இருக்குற மாதிரி இருக்கு. காலைல சாப்பிட நேரம் வந்துட்டு... அதனாலயா...?

அது கிடக்கட்டும்ணே... சாப்பாடுதான் எப்பன்னாலும் சாப்பிடலாமே.. எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருக்குது..

என்ன ஆச்சர்யம்பா..?

இல்ல.. இதுல இவ்ளோ இருக்கா? நாங்க இதுவர இதப்பத்தியெல்லாம் தெரியாமலே இருந்திருக்கோமே  அண்ணாச்சி....

இது மட்டும் இல்லப்பா.... இன்னும் இருக்கு... முதல்ல நீயும் உன் வீட்டுக்காரியும் போயி சாப்பிட்டுட்டு வாங்க. எனக்கும் பசிக்குதுல்ல... அப்படி சாப்பிட்டுட்டு வரும் போது, இதப்பத்தி உனக்கு தெரிஞ்ச ஆளுங்களுக்கெல்லாம் இந்த இயற்கை வெவசாயத்த பத்தி சொல்லி அவங்களையும் வர சொல்லு... பாவம் நம்ம பசங்க... ரசாயன உரம் போட்டு அவங்களும் பாழாகி, நம்ம நெலத்தையும் பாழாக்கிட்டு இருக்காங்க. அவங்களையும் இந்த பக்கம் திசை திருப்பி கொண்டு வாப்பா....

சரிங்க அண்ணாச்சி...

என்ன முத்தம்மா ... நீயும் உனக்கு தெரிஞ்சவங்கள கூட்டிட்டு வாம்மா..

சரிண்ணே.. வரட்டுமாண்ணே...

அமிர்த கரைசல் பயன்படுத்தும் முறை

பாசனத்துக்கு தயாராக உள்ள அமிர்த கரைசல்

ஏ... ராமசாமி ... வாப்பா.... வா. காலைல வான்னு சொன்னேன். அதுக்காக இவ்வளவு சீக்கிரமா அதிகாலைலேயே வந்துட்டியேப்பா....

ஆமாம்ணே... நீங்க சொன்னத நேத்து ராத்திரி நம்ம வீட்டுலயும் சொன்னேன். இதப்பத்தியேதான் ராத்திரி பூராம் பேச்சு.. என்னைய விட என் வீட்டுக்காரிக்கு ரொம்ப ஆர்வமா போச்சுஅண்ணாச்சி... அதனால அவளும் உங்களை பாக்க வாரேன்னு சொல்லிருக்கா. அவ கை வேலைய முடிச்சிட்டு இப்ப வந்துருவா அண்ணாச்சி...

அந்தா வந்துட்டால தங்கச்சி ... வாம்மா ... முத்தம்மா..... நல்லா இருக்கியா...?

நல்லாருக்கேண்ணே. நீங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க?

ஆண்டவன் அருளால நாங்களும் நல்லதாம்மா இருக்கோம். என்ன உன் புருஷன்ட நேத்து நெறைய சொன்னேனே... சொன்னானா...?

ஆமாம்ணே.... நேத்து ராத்திரி மச்சான் வீட்டுக்கு வந்து எல்லாத்தையும் சொன்னாக. ரொம்ப சந்தோசம்ணே... அதான் அதப்பத்தி இன்னும் தெரிஞ்சிக்கலாம்னு ரொம்ப ஆர்வமா இருந்துச்சி. வந்துட்டேன்.

சரி. வா,. உக்காருங்க ரெண்டு பேரும்.. நீயி அந்தா அதுல உக்காருப்பா... ம்ம்...
நேத்து நா அவன்கிட்ட அமிர்த கரைசல் தயாரிக்கறத பத்தி சொல்லிட்டு இருந்தேன்.  உனக்கு அது புரிஞ்சிதுல்லா ... நா திரும்ப சொல்லனுமா..? வேண்டாம்ல...?

அதைப்பத்தி நல்லா தெரிஞ்சிகிட்டேன்.. நீங்க மேல சொல்லுங்கண்ணே ...

ம்ம்... அதாவது, அப்படி நாம தயாரிச்ச அமிர்த கரைசலை ஒருநாள் வச்சிருந்து மறுநாளுல இருந்து பயன்படுத்த ஆரம்பிக்கலாம். அதிகபட்சமா மூணு நாளைக்கு அந்த கரைசல வச்சிருக்கலாம்.

அதுக்கு மேல வச்சிருந்தா...???

அதுக்கு மேல வச்சிருந்தா உருவாகிற அந்த நுண்ணுயிர்களோட எண்ணிக்கை குறைஞ்சிரும்... அப்புறம் நாம பண்ணுன வேலையெல்லாம் வீணா போய்டும். பலன் இல்ல. அதனால மூணு நாளைக்குள்ள பயன்படுத்தணும்.. தினமும் ரெண்டு வேலை கலக்கி விடனும்.
இந்த இருநூறு லிட்டர் அளவு-நீ வச்சிருக்கிற ஒரு ஏக்கர் நிலத்துக்கு போதும்பா... அதனால நீ தண்ணி பாச்சும்போது இதையும் சேத்து பாசன நீரோட கலந்து விட்டுரு....

பாசன நீரோட கலந்து விடுறதுன்னா  எப்படி அண்ணாச்சி...?

நீ ட்ரம்ல இந்த கரைசல கரைச்சிருந்த அப்படின்னா, அந்த ட்ரம்ம வரப்பு மேல வச்சி..., ஒரு டியூப் போட்டு வெளிய எடு, இல்லைன்னா ஒரு நல்லிய கீழ பொருத்தி தண்ணியோட கலந்து வயலுக்கு போற மாதிரி செஞ்சிறு...

அண்ணே ... ஒரு ஏக்கருக்கு அந்த இருநூறு லிட்டர் போதுமாண்ணே ... கூட கொஞ்சம் கொடுக்குறத பத்தி தப்பு இல்லையே ...?

தப்பே இல்ல முத்தம்மா... இருநூறு லிட்டர் போதும்... கூட கொடுத்தாலும் நல்லதுதான். இத நீ ஒவ்வொரு தடவ பாசனம் பண்ணும்போதும் கரைசல கொடுத்துட்டே இருக்கணும்...

அண்ணே ... இத தவிர வேற முறைல இந்த கரைசல பயன்படுத்தலாமாண்ணே....?

இருக்கு... நீ தயார் பண்ணுன அந்த கரைசல பயிர்களுக்கு தெளிக்கவும் செய்யலாம்.

தெளிக்கிறதுன்னா எப்படி அண்ணாச்சி...?

தெளிக்கிறதுன்னா ... அந்த கரைசல அப்படியே பயிர்களுக்கு நேரிடையா தெளிக்காம, அதோட தண்ணிய கலந்துதான் தெளிக்கணும்... எதுக்காக அப்படின்னா, கரைசல் நல்ல கெட்டியா இருக்கும். இலை மேல விழும் போது  இலை மேல இருக்குற துவாரத்த அடைச்சிடும்.அதோட சுவாசத்த தடை பண்ணிடும். அதனால தண்ணிய சேத்து தெளிக்கணும்...

அப்படின்னா எவ்வளவு தண்ணி சேக்கணும்...?

அஞ்சி லிட்டர் அமிர்த கரைசல நல்லா வடிகட்டி எடுத்துட்டு, நூறு லிட்டர் தண்ணியோட கலந்துட்டு பதினஞ்சி நாளைக்கு ஒரு தடவ தெளிச்சிட்டே இருக்கலாம்.

எல்லா வகையான பயிருக்கும் இத பயன்படுத்தலாமா அண்ணாச்சி...?

ஆமாம்... எல்லா வகையான பயிருக்கும் இத பயன்படுத்தலாம். அப்புறம், வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம், ஏன் அனைத்து வகையான பழ வகை மரங்களுக்குக்கூட இதை பயன்படுத்தலாம்.... சரி.. முத்தம்மா ... நீ ஏதோ கேக்கனும்னு நினைக்கற.. என்ன கேளு...

சரி. அமிர்த கரைசல தெளிச்சிட்டோம். இப்படி செய்றதால பயிருக்கு என்ன நன்மை?

Thursday, August 20, 2015

அமிர்த கரைசல்

ஏ.. ராமசாமி .... இருக்கியாப்பா... ஆங்... இந்தா வந்துட்டேன்...

ஆமாம்ணே.. இருக்கேன்.....
அண்ணே.....நீரு சொன்ன மாதிரி எனக்கு இன்னும் ஆச்சர்யம் தாங்க முடியல. இன்னும் நெறைய உம்மகிட்ட தெரிஞ்சிக்கணும்... அந்த .. அமிர்த கரைசல்னு சொன்ணீகளே ... அத சொல்லுங்கண்ணே...

நீ சொன்னிய .... ஒரு மாட்டு சாணத்த வச்சி ஒரு ஏக்கர் நெலத்துல எப்படி வெவசாயம் பாக்குறதுன்னு கேட்டெல்லா... அதுக்கு ஒரு வழிமுறைதான் இந்த அமிர்த கரைசல். அதாவது நுண்ணுயிரிகளை பெருக்குற முறைதான் அமிர்த கரைசல்.

அத எப்படி செய்யணும்...?

சொல்லுறத கவனமா கேட்டுக்கோ..
இல்ல... எதாவது எழுதி வைக்கணும்னா எழுதி வச்சிக்கோப்பா.. அதாவது,
1) பத்து கிலோ சாணி (புதியது)
2) பத்து லிட்டர் கோமியம்
3) இரண்டு கிலோ அச்சு வெல்லம் (இனிப்புக்காகதான் இந்த அச்சு வெல்லம். அதனால அதுக்குப்பதிலா ரெண்டு கிலோ பப்பாளி பழமோ, அஞ்சு கிலோ சப்போட்டா பழமோ, ரெண்டு லிட்டர் கரும்புச்சாரோ கலந்துக்கிடலாம்).
4) இரண்டு கிலோ பயத்த மாவு
5) இருநூறு லிட்டர் தண்ணி
6) நம்ம வயல் வரப்பு மண் - ஒரு கைப்பிடி அளவு
இதையெல்லாம் ஒரு பெரிய தொட்டி, இல்லைன்னா ஒரு பிளாஸ்டிக் ட்ரம்ல போட்டு நல்லா கலக்கணும்.பிறகுஒரு காட்டன் துணிய போட்டு நல்ல மூடி வச்சுக்க. அந்த கரைசல தினமும் காலைல ஒரு தடவ சாயுங்காலம் ஒரு தடவன்னு கலக்கிட்டு வரணும். இப்படி நாம செய்றதால, அந்த தொட்டில இருக்குற நுண்ணுயிரிகள் எல்லாம் அரை மணி நேரத்துக்கு ஒரு தடவ இரண்டு மடங்கா பெருகிட்டே போகும்.. இந்த எண்ணிக்கையை யாராலையும் கணக்கிட முடியாது...
இதுல ஏதாவது உனக்கு சந்தேகம் வந்திருக்கனுமே...

ஆமாம்ணே... வயலுக்கு சாணி, கோமியம் தண்ணி போட்டு கலக்க சொன்னீங்க சரி. அதுல போயி எதுக்கு இனிப்பு, மாவு, வயக்காட்டு மண்ணு...?அதுல சந்தேகம் இருக்குண்ணே ...

சந்தேகம் வரணும்லா... அப்பதான நீ இதுல ஆர்வமா இருக்குறது தெரியும்...
சரி. சொல்றேன்... பயத்த மாவு ஏன் போடுறோம்னா, நுண்ணுயிரிகளுக்கு அதுதான் சாப்பாடு.. அப்புறம், இனிப்பு ஏன் போடுறோம் அப்படின்னா, இந்த கரைசலை வயலுக்கு பாச்சும் போது.... இந்த இனிப்போட தன்மை மண்ணுக்குள்ள இருக்குற மண்புழுவை கவரக்கூடியதா இருக்கும். மண்ணு ஏன் போடுறோம் அப்படின்னா... ஏற்கனவே நம்ம மாட்டு சாணத்துல இருக்குற நுண்ணுயிரிகளும், மண்ணுல இருக்குற நுண்ணுயிரிகளும் ஒன்றோடு ஒன்று நட்பாக்கிக் கொள்ளும். இதுதாம்பா அமிர்த கரைசல்...

ம்ம்... சரிண்ணே.... நானும் இதையெல்லாமே எழுதி வச்சிருக்கேன். வீட்டுல போயி செஞ்சி பாக்குறேன்... அப்புறம் இத எப்படி பயன்படுத்தணும் அப்படிங்கரத பத்தியும் சொல்லிக்கொடுக்கனுமே...

கண்டிப்பா சொல்றேம்பா.. ஆனா இப்ப வேண்டாம். நேரமாயிட்டுல்லா .... எனக்கும் களைப்பா இருக்கு... காலைல பேசுவோமா...?

சரிங்கண்ணே... நானும் காலைல வாரேன்.

இயற்கை விவசாயம் பற்றி ....

அண்ணாச்சி .... இருக்கேளா..?

யாருப்பா... ஏ... ராமசாமியா.... வாவே... வா .... வாசல்ல நின்னுட்டா என்ன அர்த்தம்... உள்ள வாரும்வே....

அதான் நீங்க இருக்கேளா ......என்னன்னு .....

என்னப்பா ... அதான் சாயுங்காலம் உன்னிய வர சொல்லிட்டேம்லா, அப்புறம் என்ன..? உனக்காத்தான்வே உக்காந்திருக்கேன். வா. வா.... வந்து இந்த திண்ணைல உக்காரும்...

சொல்லுண்ணே .... இந்த இயற்கை விவசாயம் பத்தி சொல்லுறேன்னு சொன்னிகல்லா...

ம்ம்.... சரி. முதல்ல இந்தகாப்பித் தண்ணிய குடியும்...
அப்படியே நான் சொல்லுறதையும் கேளும்....
பயிருக்கு தேவையான இடுபொருள் எல்லாம் வெளிய விலை கொடுத்து வாங்காதப்பா.. அதை நாமலே தயார் பண்ற மாதிரி இருக்கணும்.

நாமலே தயார் பண்றதா...? யூரியா, பொட்டாஷ்,டி ஏ பி இதெல்லாம் நாமளா தயாரிக்க முடியும்? என்னண்ணே நக்கல் பன்னுதேலா?

அதில்லப்பா... பயிருக்கு தேவையான எல்லா சத்துக்களும் நம்ம மண்ணுலேயே இருக்கு. நீ சொல்லுதிய அந்த ரசாயான உரம் வரதுக்கு  முன்னால நம்ம ஆள்கள் எத வச்சு விவசாயம் பண்ணாக? தொழு உரத்தையும் குப்பையும் போட்டுத்தான் வெவசாயம் பாத்தாக. அவங்க நல்ல மகசூல் பாக்கலியா?

அந்த அளவுக்கு என்கிட்டே இப்ப நெறைய மாடு  கண்ணு எதுவும் இல்லியேண்ணே.... ஒரே ஒரு பால் மாடுதான வச்சிருக்கேன்.

அது போதும்வே. அத வச்சி பத்து ஏக்கருக்கு வெவசாயம் பாக்கலாமே.

மறுபடியும் மறுபடியும் நக்கல் பன்னுதேலா? ஒரு மாட்ட வச்சி பத்து ஏக்கருக்கா...?!!

ஒரு செடி வளரதுக்கு தேவையான நுண்ணூட்ட, பெரூட்ட சத்துக்கள் எல்லாமேநம்ம மண்ணுேலேயே இருக்கு... வெப்ப சக்திய-சூரியன்கிட்ட இருந்து எடுத்துக்கிடுது. தழை சத்தை-காத்துட்ட இருந்து எடுத்துக்கிடுது... நீர் சத்து-மழை மூலமா கிடைச்சிருது..... இப்ப... நீ என்ன கொடுக்குற செடிக்கு....? எல்லா சத்துக்களுமே இயற்கை மூலமாவே கிடைச்சிருதப்பா ...

அது எப்படி அண்ணாச்சி .... நாம உரம் போட போயித்தான பயிறு நல்லா வளருது...?

இதுக்கு ஒரு உதாரணம் சொல்லுதேன். காட்டுல இருக்குற மரம் செடி கொடிலாம் நீ உரம் போட்டாவே வளந்துட்டு இருக்கு. அதுவா வளரலியா?  அத மாதிரிதான் நாமளும் இயற்கை முறைல வெவசாயம் பண்ணும்., இப்ப புரிதா?

அட...... ஆமாம்ல... சரியாத்தான் சொல்லுதீக... ஆனா நான் என்ன செய்யணும்னு சொல்லவே இல்ல.

இரு.. இரு..... உனக்கு புரியனும்னுட்டுத்தான் காட்டுல உள்ள மரம் செடி கொடிய பத்தி சொன்னேன்.  இப்ப விசயத்துக்கு வாறன். பயிர் தான் வளரதுக்கு வேண்டிய சத்துக்கள மண்ணுல இருந்து எடுத்துக்கும்னு சொன்னேன்லா... அதால நேரிடையாவே மண்ணுல இருந்து எடுக்க முடியாது.
 உன் வீட்டுல சமையலுக்கு வேண்டிய எல்லா பொருளும் சமையக்கட்டுல இருந்தாலும் உன்னால நேரிடையா சாப்பிட முடியுமா? முடியதுல்லா..? அத யாராவது சமச்சி தந்தாதான சாப்பிட முடியும்.... அதே மாதிரிதான் பயிருக்கும் அதோட சத்துக்கள வேர்கள் தானாவே எடுக்கக்கூடிய தன்மைக்கு மாத்தி கொடுக்கணும்.

நாமாலா அண்ணாச்சி மாத்தி கொடுக்கணும்...?

இல்லப்பா, அந்த வேலையத்தான் மண்ணுல இருக்குற-நன்மை செய்யுற நுண்ணுயிரிகள் செய்யும...

அப்போ அந்த மண்ணுல ஏற்கனவே நுண்ணுயிரி இருக்குமா?

இருந்த நுண்ணுயிரிக எல்லாத்தையும்தான் உங்களை மாதிரி ஆளுங்கதான் ரசாயான உரம் போட்டுத்தான் கொன்னுட்டீகளே....

சரி ... ஏதோ செஞ்சிட்டோம்... இப்ப அந்த நுண்ணுயிரி வளரதுக்கு நான் என்ன செய்யணும்..?

இப்பதாம்ப்பா கரக்டா விசயத்துக்கு வார....
சொல்லுதேன்.. சொல்லுதேன்.. அதையும் கேளு. மாட்டு சாணத்துலதான் அந்த நுன்னுயிரிகளே அதிகமா இருக்கு.

மாட்டுச்சாணத்துலயா?அப்ப மாட்டுச்சாணம் மட்டும் போட்டா போதுமா? என்கிட்ட இருக்குற ஒரு மாட்டு சாணம் அதுக்கு காணாதுல்லா அண்ணாச்சி...

ஒரு கிராம் மாட்டு சாணத்துல எவ்வளவு நுண்ணுயிரி இருக்கும்னு உனக்கு தெரியுமா? ஒரு உத்தேசமா சொல்லேன் பாப்போம்.

என்ன, ஒரு ஆயிரம், ரெண்டாயிரம் இருக்குமா...?

சொன்னா அசந்துருவேவே... ஒரு கிராம் சாணத்துல ஐநூறு கோடி நுண்ணுயிரி இருக்கும்பா....

அடேங்கப்பா.... ஐநூறு கோடியா ...?

அப்படியே வாய  பொளந்துட்டு இரு....  என் வீட்டுல அவ கூப்புடுதா, என்னான்னு கேட்டுட்டு வந்துடுறேன். அமிர்தக்கரைசல்னு ஒன்னு இருக்கு. அத பத்தி வந்து சொல்லுதேன்... அதுவரைக்கும் கொஞ்சம் பொறு...

Wednesday, August 19, 2015

அறிமுகம்

வணக்கம் ராமசாமி. எப்படிப்பா இருக்க?

வணக்கம் ராசாண்ணே.. ஏதோ இருக்கோம்.

என்னவே, குரல்ல சுரத்து இல்லாம பேசுத?

நம்ம குடும்பம் பெருசாயிட்டுல்லாண்ணே... அதான் வருமானத்துக்கு என்னபன்னலாம்ன்னுட்டு  இருக்கேன். கொஞ்சம் குழப்பமா இருக்கு.

என்னவே... இத போயி யோசிச்சிட்டு இருக்கீவ..? உன்கிட்டதான் விவசாய நெலம் இருக்குல்லா? அதுவே உமக்கு பணம் கொழிக்கிற தொழில்தான?

அது எப்படிண்ணே ? நெறைய பேரு சம்பாதிக்க முடியாம வித்துட்டு போறானுக. அதுல எப்படிண்ணே லாபம் பாக்குறது?

அப்படி கேளுப்பா.. உன்கிட்ட இருக்குற அந்த கொஞ்சூண்டு நெலத்த வச்சி நீ பெரிய பணக்காரனா வாரதுக்கு நான் வழி சொல்லுதேன். சரி. நீ இப்ப எவ்வளவு நெலம் வச்சிருக்க? அதுல என்ன பயிரு போட்ருக்க?

என்கிட்டே என்ன, ஒரு ஏக்கர் தான இருக்கு. அதுலயும் தண்ணி பாசானம் கம்மியாத்தான் இருக்கு. நெல்லு போடுவேன். அது போக அப்பப்ப காய்கறி ஏதாவது போட்டுக்குவேன். அதுல என்னால சரியான லாபம் பாக்க முடியலியே...

இது போதுமே ராமசாமி. நான் சொல்றத நீ கேக்கறதா இருந்தா உனக்கு லாபம் கொழிக்கிற பூமியா உன் நெலம் மாற வைக்கிறேன். இது என் பொறுப்புவே.

அண்ணே.. இது என்ன கேள்விண்ணே.... நீங்க சொல்லி நா ஏதும் கேக்காம இருந்திருக்கேனா? அதுலயும் பணக்காரனா வேற மாத்தி காட்டுறேன்னு சொல்லி இருக்கீக. கேக்காம இருப்பேனா? சொல்லுங்கண்ணே... சொல்லுங்க..

இயற்கை விவசாயம் பத்தி நீ கேள்வி பட்டிருக்கியாப்பா?

எதோ சொல்லுவாக. ஆனா அத பத்தி எனக்கு அவ்வளவா தெரியாதுண்ணே... நீங்கதான் தாத்தா காலத்துல இருந்து ரெண்டு, மூணு தலைமுறையா நல்லபடியா வெவசாயம் பாத்துட்டு இருக்கீக. நீங்க சொன்னா சரியாதான் இருக்கும். சொல்லுங்களேன். கேப்போம்.


ம்ம்.. சரி.. இப்ப உனக்கு ஒரு பயிர்., பயிர் செய்யும் போது என்னல்லாம் அதிகப்படியான செலவு வரும். சொல்லு...

எனக்கு உரம் வாங்க, பூச்சி கொல்லி வாங்க, களை கொல்லி வாங்க, களை எடுப்புக்கு அப்படி இப்படின்னு இதுலதாம் செலவு அதிகமாகும் அண்ணாச்சி...

நான் சொல்ற மாதிரி இந்த இயற்கை முறைல விவசாயம் பாத்தேன்னா இந்த செலவெல்லாம் உனக்கு வராதுன்னு சொல்றேன். அப்புறம் செலவ குறைச்சாலே உனக்கு லாபத்துல ஒரு பெரிய பங்குதான?

செலவ குறைக்கிறதா...? அது எப்படி?

வெளக்கமா சொல்ல கொஞ்சம் நேரமாகும். நானு இப்ப வயக்காட்டுல உள்ள வேலைய முடிக்கத்தான் போயிட்டு இருக்கேன். அத முடிச்சிட்டு வந்து சாயுங்காலமா எல்லாத்தையும் சொல்லுதேன். நீயும் நம்ம வீட்டு பக்கம் சாயுங்காலம் வாரும்வே. பொறுமையா பேசுவோம். சரியாவே.

சரிண்ணே... சாயுங்காலமே பாப்போம். அப்ப நானும் வரேண்ணே...