Thursday, February 18, 2016

காயத்துக்கு (உடலுக்கு) ஏற்ற காய்கள் - இன்று முருங்கைக்காய்

காய்கறிகளின் அரசன் முருங்கைக்காய் என்று சொல்வதுண்டு. உடலுக்கு தேவையான சத்துக்களை அதிகமாக தன்னகத்தே கொண்டுள்ளதால் இதை அவ்வாறு கூறுவர். முருங்கை மரத்திற்கு 'பிரம்ம விருட்சம்' என்ற பெயர் மட்டுமல்லாது 'ஏழைகளின் மரப்பயிர்' போன்ற சிறப்புப் பெயர்களும் உள்ளது.

முருங்கை மரத்தின் இலைகள், காய்கள், பிஞ்சுகள், பூக்கள், பட்டைகள், முருங்கை கோந்து அனைத்திலும் பஞ்ச பூத சக்தி மிகுந்துள்ளதால் உடலில் ஏற்படும் பல பிணிகளை நீக்க வல்லது. மனிதர்களின் உன்னத மருத்துவ பொக்கிஷம் இந்த முருங்கை மரம்.

இதனுடைய பிஞ்சுக் காய்கள் மட்டுமே சமையலுக்கு உபயோகப் படுத்துகின்றோம். அதிக அளவு கலோரி சக்தியை கொண்டுள்ளதால் நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் இதை உண்பதன் மூலம் பயனடையலாம்.

முருங்கை காய்களை சூப்பாக பயன்படுத்தலாம். துவையல் செய்து உட்கொள்ளலாம். முருங்கைக்காய் பொரியல், முருங்கைக்காய் சாம்பார் போன்றவை தமிழர்களிடையே அதிகம் உபயோகிக்கும் உணவாக உள்ளது.

இரத்த விருத்திக்கும் தாது விருத்திக்கும் முருங்கை காய்கள் சிறந்தது. எலும்புருக்கி நோய் தீர்த்து வைக்கும். பெண்கள் இதை தொடர்ந்து உணவுடன் சேர்த்து வந்தால் அவர்களுக்கு எற்படக் கூடிய மாதவிடாய் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். காக்காய் வலிப்பு உள்ளவர்கள், பக்க வாத நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக உணவோடு சேர்த்துக்கொள்ள வேண்டும். நல்ல பலன் கிடைக்கும். பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளதால் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இதை தொடர்ந்து உணவோடு சேர்த்து கொள்ளலாம். விட்டமின் சத்துக்கள் அதிகம் உள்ளதால் கண் சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக இதை அதிகம் சாப்பிட வேண்டும்.

சாதாரணமாக இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நம் முதுமையை இன்னும் சில காலங்கள் தள்ளிப்போடலாம் என்பது சித்தர்களின் கூற்று. இலை பூ பட்டை முதல் அனைத்திலும் சத்துக்கள் நிரம்ப உள்ளதால் வீட்டிற்கு ஒரு முருங்கை வளர்த்து உணவோடு சேர்த்து ஆரோக்யமாக வாழ்வோம். 

Saturday, February 6, 2016

காயத்துக்கு (உடலுக்கு) ஏற்ற காய்கள் - இன்று தேங்காய்


தாழை, தெங்கு, மாதர்கனி, முக்கண்கனி, ரசகந்தம், சிரமபலம், இராசபலம், சுராகாரம், பானிவிருக்கம், தேங்கனி இவையெல்லாம் தேங்காயின் மற்ற பெயர்கள். தேங்காய் என்பது முழுதான ஊட்டமிகு உணவு. ரொம்ப பசியா இருக்குது, வீட்ல ஒன்னுமே இல்ல அப்படின்னா அந்த நேரத்துல கொஞ்சம் தேங்காய் எடுத்து அப்படியே சாப்பிட்டால் பசி இருந்த இடம் தெரியாம ஓடிரும். மற்ற காய்களுக்கு இல்லாத சிறப்பு என்னவென்றால் இது இந்த சீசனில்தான் கிடைக்கும் என்று இல்லை. எப்போது வேண்டுமானாலும் கிடைக்கும்.

 தேங்காய் சேர்க்காத சமையல் ருசிக்காது. அந்த அளவு சமையலில் முக்கியமானது இதன் பங்கு. ஆனால் இதை அதிக சூட்டில் வைத்து சமைக்கும்போது இதன் கொழுப்பு சத்தானது உடலுக்கு தீங்கு உண்டாக்கும் சத்தாக மாறிவிடுகிறது. அதனால் இதை சமையலில் இறுதியாக உணவுடன் சேர்த்துக்கொள்ளவேண்டும். மேலும் இந்த தேங்காயை அம்மி அல்லது உரலில் இட்டு அரைத்து பயன்படுத்தும்போது அதன் உயிர் சத்து முழுமையாக நமக்கு கிடைக்கிறது. ஆனால் மிக்சியில் இட்டு அரைக்கும் போது அளவுக்கதிகமான சுழற்சியால் அதனுடைய உயிர்சத்துக்கள் அழிந்து விடுகிறது. உணவுப்பொருள்கள் விரைவில் கெட்டுப்போவதற்கு காரணமே இதனால்தான்.

சமைக்காத தேங்காய் பால் உணவு உடலுக்கு நன்மை தருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. சளி, இருமல் நீக்குகிறது. புற்று நோய் செல்களை வளர விடாமல் தடுக்கிறது. குடலில் உள்ள புழு, பூச்சிகளை வெளியேற்றுகிறது. மலச்சிக்கலை நீக்குகிறது. மழைக்காலங்களில் உடலுக்கு தேவையான வெப்ப சக்தியினை அளிக்கிறது. மற்றும் உடலுக்கு தேவையான சக்தியை தருவதில் மற்ற அசைவ உணவுகளை விட ஆற்றல் மிகுந்தது.

ஒரு மனிதன் ஒரு தேங்காயை அப்படியே சவைத்து சாப்பிடலாம். இது ஒரு நேர உணவுக்குண்டான ஆற்றலைத்தரும். இதனால் நமக்கு ஒரு வேளை உணவு தயாரிக்க செலவிடும் நேரம், எரிபொருள், பொருள் செலவு ஆகியவை மிச்சப்படுகிறது.

தேங்காயை துருவி பூ எடுத்து அதை அரைத்து பாலெடுத்து, அந்த பாலை கொஞ்சம் இனிப்பு சேர்த்து (வெள்ளை சர்க்கரை தவிர்க்கவும்) வாயில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி சப்பி சப்பி சாப்பிடலாம். மடமடவென்று குடிக்கக்கூடாது.

இந்து கோவில்களில் தேங்காய் பழம் கொண்டு போய் பூஜை செய்துவிட்டு வந்து அதையே உணவாக சிலர் எடுத்துக்கொள்வதை பார்க்கலாம். இது ஒரு ஆரோக்யமான உணவு என்பதை அன்றைய தமிழர்கள் கற்றறிந்து அதை செயல்படுத்தி இருந்தார்கள். நாமளும் அதை தொடர்வோம். நலமாக வாழ்வோம்.